10-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை
அசோக் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை கோடம்பாக்கம், அசோக் நகர் அம்பேத்கர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு. இவரது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் உள்ளது. இவர் ரெயில்வே துறையில் கூடுதல் பொது மேலாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.
தற்போது மெட்ரோ ரெயில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். மூத்த மகளுக்கு திருமணம் அகிவிட்டது. இவரது இளைய மகள் நித்யஸ்ரீ (வயது 22). இவர் சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில், நேற்று காலை 9 மணியளவில் தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடி படிக்கட்டு ஜன்னல் வழியாக குதித்து நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்ட பெற்றோர்கள் அழுது ஒப்பாரி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் உதவி போலீஸ் கமிஷனர் தனசெல்வன், இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீஸ் படையினர் நித்யஸ்ரீயின் உடலை மீட்டு ஓமந்தூரார் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
துண்டு சீட்டு
இந்தநிலையில், நித்யஸ்ரீ அறையில் இருந்து துண்டு சீட்டில் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், 'இது நானே எடுத்த முடிவு. எனக்கு கிடைத்த அப்பா அம்மா மிகவும் நல்லவர்கள். என்னை நன்றாக படிக்க வைத்து என்னை நல்லபடியாக கவனித்துக்கொண்டார்கள்' என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் நேற்று தேர்வு இருந்ததாகவும், தேர்வு குறித்த பயத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் அசோக் நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே நித்யஸ்ரீயின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவருடைய தோழிகளிடமும் விசாரித்து வருகிறார்கள். அசோக் நகரில் மாணவி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.