மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம்
பர்கூரில் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கினார்.
அந்தியூர்
பர்கூரில் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கினார்.
மருந்து பெட்டகம்
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதிக்கு வருகை தந்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒசூர் காலனி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
அமைச்சர் ஆய்வு
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். மேலும் அமைச்சர் ஒசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சருடன் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், தமிழ்நாடு கோ அப் டெக்ஸ் இயக்குனர் எஸ்.பி.ரமேஷ், தி.மு.க.வை சேர்ந்த ஈரோடு வர்த்தக அணி அமைப்பாளர் கே.பி.எஸ்.மகாலிங்கம், அந்தியூர் நகர செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசன் மற்றும் கட்சியினர், நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் சென்றனர்.