அதிக அளவு சிக்கும் மருத்துவ குணம் வாய்ந்த தில்லை நண்டுகள்

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த தில்லை நண்டுகள் அதிக அளவு சிக்குகிறது. இந்த நண்டுகள் கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

Update: 2022-11-29 20:14 GMT

அதிராம்பட்டினம்;

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த தில்லை நண்டுகள் அதிக அளவு சிக்குகிறது. இந்த நண்டுகள் கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

தில்லை நண்டுகள்

மருத்துவ குணம் வாய்ந்த தில்லை நண்டுகள் சேற்று கடல் பகுதியில் அதிக அளவு வளரும் தன்மை கொண்டது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தற்போது தில்லைநண்டுகள் அதிகம் கிடைக்கின்றன. அதிராம்பட்டினம் கடற்பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை ஆகிய கடற்பகுதி சேற்றுப்பகுதியாக உள்ளதால் இந்தப்பகுதிகளில் தில்லைநண்டுகள் அதிகம் கிடைக்கின்றன.மேலும் இந்த வகை நண்டுகள் தில்லை மரங்கள் உள்ள பகுதிகளில் சேற்றில் குழி தோண்டி வாழக்கூடியது.

100 கிராம் எடை

இந்த குழி சுமார் 3 அடி ஆழத்தில் இருக்கும். ஒவ்வொரு குழியிலும் குறைந்தது 3 முதல் 5 நண்டுகள் வரை இருக்கும். இந்த குழிகளில் நண்டுகள் இனப்பெருக்கம் செய்கிறது. இது தில்லை மரவேர்களில் உள்ள பால் போன்ற வெண்மை நிற திரவத்தையே உணவாக உட்கொண்டு வளரும் தில்லை நண்டுகள் அதிகபட்சம் 100 கிராம் எடை உள்ளதாக இருக்கும்.இந்த தில்லைநண்டுகளை பிடிக்க தனி மீனவர்கள் உள்ளனர்.பொந்தில் இந்த நண்டு இருப்பதால் கையை விட்டுதான் பிடிப்பார்கள் இதற்கு நல்ல அனுபவம் வேண்டும். காரணம் பொந்தில் நண்டுகளுக்கு பதில் பாம்பும் இருக்கும். இதனால் கவனமுடன் நண்டுகளை பிடிக்க வேண்டும். இந்த நண்டு பிடிக்கும் தொழிலை ஒரு சிலர் பாரம்பரிய தொழிலாக செய்து வருகிறார்கள். இந்த நண்டுகள் தற்போது கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நோய்கள் தீரும்

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது

நான் 25 வருடங்களாக தில்லைநண்டு பிடிக்கும் தொழில் செய்து வருகின்றேன். அதிராம்பட்டினம் கடற்பகுதியொட்டி சதுப்பு நிலப்பகுதியில் தில்லை நண்டுகள் அதிக அளவில் குழிதோண்டிவாழ்ந்து வருகிறது. இந்தவகை நண்டுகள் மருத்துவகுணம் கொண்டது. இதை ரசம் வைத்து சாப்பிட்டால் முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுப்புண் பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.இதனால் இந்த நண்டுகளை கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் அதிகம் வாங்கிச்செல்கிறார்கள். இந்த நண்டுகள் மழைகாலங்களில் அதிகம் கிடைக்கின்றன. வெயில் காலங்களில் சேற்றுமண் இறுகி காணப்படுவதால் கடலோர வாய்க்கால்களுக்கு சென்று விடும். தற்போது அதிராம்பட்டினம் பகுதிகளில் ஓரளவு மழை பெய்து மண் ஈரமாக உள்ளதால் தற்போது தில்லை நண்டுகள் அதிகம் கிடைக்கின்றன. இவ்வாறு மீனவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்