மருத்துவ படிப்புகளில் சேர தயார்படுத்தி கொள்ள வேண்டும்

பழங்குடியின மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புகளில் சேர தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-11-05 18:45 GMT

பழங்குடியின மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புகளில் சேர தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.

கலந்துரையாடல் கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் அலுவலக தேசிய தகவலியல் கூட்டரங்கில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி மாணவ, மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 457 மாணவர்களும், 439 மாணவிகளும் என மொத்தம் 896 பேர் விடுதிகளில் தங்கி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 207 மாணவர்களும், 222 மாணவிகளும் என மொத்தம் 429 மாணவ, மாணவிகள் 10 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

அர்ப்பணிப்பு உணர்வோடு

பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர், ஆசிரியைகள் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வியை கற்பிக்க வேண்டும். இந்த பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து வரும் பழங்குடியினர் மாணவ, மாணவிகள் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளில் சேர்வதற்கான நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கும், நீட் போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை ஆசிரியர், ஆசிரியைகள் சிறப்பாக மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பழங்குடியினர் நல அலுவலக திட்ட அலுவலர் ரமேஷ்குமார், தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் மற்றும் பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் காணொலிகாட்சி மூலம் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்