மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் கவுந்தப்பாடி அரசு பள்ளி மாணவி மாநில அளவில் முதல் இடம்

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் கவுந்தப்பாடி அரசு பள்ளி மாணவி மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

Update: 2022-10-17 21:59 GMT

கவுந்தப்பாடி

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் கவுந்தப்பாடி அரசு பள்ளி மாணவி மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

கவுந்தப்பாடி மாணவி

இளநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படித்த மாணவி தேவதர்ஷினி மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

கவுந்தப்பாடி அருகே உள்ள பொம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதர்ஷினி. இவருடைய தந்தை வேலுச்சாமி. தாய் கோடீஸ்வரி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலுச்சாமி இறந்துவிட்டார். கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டில் தேவதர்ஷினி பிளஸ்-2 முடித்தார். இதையடுத்து தாய் கோடீஸ்வரியின் முயற்சியால் தேவதர்ஷினி, மருத்துவ படிப்புக்கான நீட் பயிற்சியை தொடர்ந்தார். ஆனால் அவர் அந்த ஆண்டில் 184 மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகியும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து பலரின் முயற்சியால் நாமக்கல் அருகே உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். இந்த தேர்வில் அவர் 720-க்கு 518 மதிப்பெண்கள் பெற்றார்.

முதல் இடம் பிடித்து சாதனை

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கல்லூரி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மாணவி தேவதர்ஷினி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

சாதனை படைத்த மாணவி தேவதர்ஷினியை கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் மாணவி தேவதர்ஷினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்