மாவட்டம் முழுவதும் தினமும் 60 இடங்களில் மருத்துவ முகாம்
மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து தினமும் 60 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது.
டெங்கு, வைரஸ் காய்ச்சல்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை பரப்பி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறியப்பட்டு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக வருவோரின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அதன்மூலம் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
தினமும் 60 முகாம்கள்
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் தினமும் 60 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை, சுகாதாரத்துறையினர் நடத்தி வருகின்றனர். இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்று 6 இடங்களில் முகாம் நடைபெற்றது. அப்போது முகாமுக்கு வந்தவர்களுக்கு மட்டுமின்றி வீடுகளுக்கு சென்று காய்ச்சல் பாதித்த நபர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.
இதில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடந்த மருத்துவ முகாமை ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர், மருத்துவக்குழுவினருடன் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதித்த நபர்கள் இருக்கிறார்களா? என்று விசாரித்தார். மேலும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதேபோல் குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்றும் ஆணையர் சோதனை செய்தார்.
இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் செபாஸ்டியன், பொறியாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.