மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்-கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது என்றுமாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-22 18:45 GMT


மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது என்றுமாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் வருகின்ற ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து வட்டார அளவிலும் நடைபெறவுள்ளது.

அடையாள அட்டை

வருகிற ஜனவரி 3-ந் தேதி திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 6-ந்தேதி மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10-ந்தேதி இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12-ந்தேதி காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 13-ந்தேதி கண்ணங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 20-ந் தேதி தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 24-ந் தேதி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27-ந்தேதி கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 31-ந்தேதி எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பிப்ரவரி 1-ந்தேதி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 3-ந்தேதி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8-ந் தேதி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை, வங்கிக்கடனுதவி வழங்க நடவடிக்கை, வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை, வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை, 18 வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவைகள் மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பம்

ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொள்பவர்கள் 8 மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்