போதைப் பொருள் தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13,775 கிலோ போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.

Update: 2024-08-12 12:18 GMT

சென்னை,

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (12.8.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத், சேலம், மத்திய புலனாய்வுப் பிரிவு, காவல் ஆய்வாளர் பி. ஜகன்னாதன், சென்னை, மத்திய புலனாய்வுப் பிரிவு, சார்-ஆய்வாளர் கே. ராஜ்குமார் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்-ஆய்வாளர் ஆர். அருண், இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய முதுநிலை காவலர் ஆர். துரை ஆகியோருக்கு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இன்று மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13,775 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் செங்கல்பட்டு, சேலம். தஞ்சை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் எரித்து அழிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்