சேலம் புதிய பஸ் நிலையம் அருகேஆம்னி பஸ் சக்கரம் ஏறியதில் மெக்கானிக் பலிபழுதை சரிபார்த்த போது பரிதாபம்

Update: 2023-09-04 20:47 GMT

சேலம்

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ்சில் பழுதை சரிபார்த்த போது சக்கரம் ஏறியதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

மெக்கானிக்

சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஏராளமான ஆம்னி பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு 9 மணி அளவில் புறப்பட இருந்தது. ஆனால் அந்த பஸ்சில் திடீரென பிரேக் சரியாக பிடிக்கவில்லை.

இதையடுத்து அதை சரி செய்வதற்காக மெக்கானிக்கான பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவர் அங்கு வந்தார். பின்னர் அவர் பஸ்சின் அடிப்பகுதிக்கு சென்று பழுதை சரி செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் பஸ் டிரைவர் சதீசியிடம் பஸ்சை ஸ்டார்ட் செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது. அதன்படி அவரும் பஸ் ஸ்டார்ட் செய்தார். ஆனால் கியரில் இருந்ததால் பஸ் சிறிது தூரம் நகர்ந்தது.

பரிதாப சாவு

அப்போது பஸ்சின் முன் பக்க டயர் காமராஜின் கழுத்து பகுதியில் ஏறியது. இதில் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காமராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து காமராஜ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்