ஆற்காடு அடுத்த பெரியகுக்குண்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் தினகரன் (வயது 20). அதேப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு தினகரன் மோட்டார் சைக்கிளில் சின்னகுக்குண்டி பகுதியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்துள்ளார். ஆற்காடு அடுத்த புதுப்பாடி அருகே சென்றபோது ஆற்காட்டில் இருந்து செய்யார் நோக்கி சென்ற கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேன் தினகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.