மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி
கறம்பக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலியானார்.
கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார். இவருடைய மகன் சற்குணன் (வயது 21). இவர் ரெகுநாதபுரத்தில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சற்குணத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சற்குணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.