கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய் தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் தகவல்

கலெக்டர் தகவல்

Update: 2022-11-03 19:30 GMT

கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழிப்புணர்வு

குஜராத், மராட்டியம் போன்ற வட இந்திய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று ஈரோடு மாவட்டத்திலும் பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தோல் கழலை நோய் தொற்று வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. மேலும் ஈ, கொசு, உண்ணி மூலமாகவும், கறவையாளர்கள், கன்றுக்குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை குடிப்பதாலும் நோய் பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து நோயற்ற பகுதிகளுக்கு கால்நடைகள் செல்வதாலும் நோய் தொற்று பரவுகிறது.

அறிகுறிகள்

இந்த நோய் தொற்றுக்கான அறிகுறிகளாக கால்நடைகளின் கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி வடிதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் காணப்படுதல், உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளின் கால்கள் வீங்கி இருக்கும்.

இந்த நோய் தொற்றுக்கு அறிகுறிக்கு தகுந்தவாறு சிகிச்சை அளிக்கலாம். கால்நடைகளின் உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும், காயங்களுக்கும் சிசிச்சை அளித்தால் மாட்டின் கறவை திறனை தக்க வைக்கலாம். இதற்கான தடுப்பூசி கிடையாது. மேலும் தினசரி 30 கிராம் சிறுகுறிஞ்சான் பொடி எடுத்து அதனுடன் வெல்லம் கலந்து கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் நோய் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். மேலும் மஞ்சள் தூள், வேப்பிலை கொழுந்து, வேப்ப எண்ணெய் இவை மூன்றையும் கலந்து கால்நடைகளில் ஏற்பட்ட காயங்களில் பூசி வந்தால் நோய் பாதிப்பை தவிர்க்கலாம்.

புண்-கட்டிகள்

காயங்களில் ஈ மொய்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கொப்பரை தேங்காய் 1, வெல்லம் 100 கிராம், வெந்தயம் 50 கிராம், மஞ்சள் தூள் 30 கிராம் சேர்த்து கால்நடைகளுக்கு தினமும் 2 வேளை கொடுத்து வந்தால் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையில் இருந்து தனிமைப்படுத்தி பராமரித்து, சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோய் பாதித்த மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரத்தை தனியாக வைப்பத்தன் மூலம் தொற்றை தடுக்கலாம். ஈ மற்றும் கொசுக்கள் வராதவாறு மருந்து தெளிக்கலாம். புண் மற்றும் கட்டிகளை சுத்தப்படுத்திய பின் அவற்றின் துணிகள் மற்றும் பஞ்சுகளை தீயினால் எரித்து விட வேண்டும்.

கருச்சிதைவு

இந்த தோல் கழலை நோய் தொற்று 60 சதவீத மாடுகளை பாதிக்கும். இதனால் பால் உற்பத்தி தற்காலிகமாக குறையும், சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும், தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறையும், இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது, சில மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வராமல் தடுக்க சுத்தமாக மாட்டு கொட்டகையை வைத்திருக்க வேண்டும். மேலும் கால்நடைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இந்த நோய் பாதித்த கால்நடைகளின் இறப்பு சதவீதம் மிக மிக குறைவு. மேலும் இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்