நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க நடவடிக்கை - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2022-06-04 23:22 GMT

கோப்புப்படம்

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை வைத்துவிட்டு தமிழக அரசு எப்போது கொள்முதல் செய்யும் என காத்திருக்கும் நிலை இனியும் தொடரக்கூடாது என்பதற்காக தமிழக அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் . தமிழகம் முழுவதும் கோடையில் குறுவை மற்றும் நவரை ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது . அதாவது குறுகிய கால நெல் ரகங்கள் குறுவை பட்டத்துக்கு ஏற்றவை.

இச்சூழலில் அறுவடை செய்த விவசாயிகளின் நெல்லை காலதாமதம் செய்யாமல் அரசு கொள்முதல் செய்தால் தான் விவசாயிகள் ஓரளவுக்கு பயனடைவார்கள் . அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கும் போது, அதனை அரசு உடனடியாக கொள்முதல் செய்தால் தான் விவசாயிகளுக்கு நிம்மதி.

ஆனால் விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் செய்ய போதுமான எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் இல்லை என்கின்றனர் . அது மட்டுமல்ல நெல்மூட்டைகளை வைத்துவிட்டு அதை பாதுகாப்பாக மூடி வைக்க தார்ப்பாயும் இல்லை என்று தெரிவிக்கின்றனர். தார்ப்பாய் இல்லாமல் வெளிப்பகுதியில் இருக்கும் நெல் மூட்டைகள் அவ்வப்போது பெய்யும் மழைநீரில் நனைந்து வீணாகும் நிலையும் ஏற்படுகிறது.

மேலும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் போது மூட்டைக்கு ரூ .40 , ரூ .50 என வசூல் செய்வதும் முறையல்ல . காரணம் விளைவித்த நெல்லுக்கு உரிய விலையே கிடைக்காத சூழலில் , வசூலும் செய்தால் விவசாயிகள் பொருளாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் . பயிர்க்கடன் வாங்கி விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அளவிற்கு திறக்கவும் , நெல்லைப் பாதுகாக்க தார்ப்பாய் கொடுக்கவும் , விளையும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக இனிமேல் பருவ மழையும் பெய்ய இருப்பதால் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க , வசூல் செய்யாமல் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய , நெல்லுக்கு உரிய விலை கொடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்