நீர் நிலைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

நீர் நிலைகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

Update: 2023-05-23 17:48 GMT

ஒத்திகை பயிற்சி

புதுக்கோட்டை புதுக்குளத்தில், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வெள்ள அபாய காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதனை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தேசிய பேரிடர் மீட்புப்படை 4-வது படைப்பிரிவு அரக்கோணம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை வீரர்கள் மூலம் இந்த ஒத்திகை நடைபெற்றது. இதில் ரப்பர் படகில் சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கியது போலவும், அவர்களை மீட்பு படையினர் சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது மற்றும் முதல் உதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீட்பு படை வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

கிணறுகளுக்கு தடுப்பு சுவர்

இதேபோல பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் செய்து காண்பித்தனர். முன்னதாக கலெக்டர் மெர்சி ரம்யா நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், ``நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக தீயணைப்பு துறை அதிகாரியுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மண் தரை அளவில் கிணறுகள் அதிகமாக இருப்பதால், அதில் தவறி விழுந்தும் சிலர் இறப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த கிணறுகளுக்கு தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடு செய்யப்படும். தண்ணீரில் ஒருவர் விழுந்து விட்டால் அவரை எப்படி காப்பாற்றுவது என்பது தொடர்பாக தான் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபடுவதில் தன்னார்வலர்களும் உள்ளனர். அவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

பாதுகாப்பு உபகரணங்கள்

இந்நிகழ்வில், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள், தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள், மீட்பு படையினரின் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, தேசிய பேரிடர் மீட்புப்படை பிரிவின் துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன், அணித் தலைவர் மணிகண்டன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்