சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

மாவட்டத்தில் அனைத்து நகர் பகுதிகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்

Update: 2023-06-10 18:55 GMT


மாவட்டத்தில் அனைத்து நகர் பகுதிகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்

ஆய்வு கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்தும் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறை அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சிகளில் தற்போது செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்தும் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் விரிவாக கேட்டு அறிந்தார்.

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகராட்சிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவினை உரிய முறையில் சீராக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், சீராக வழங்குவதில் உள்ள சிரமங்களை குறித்தும் குடிநீர் சீராக வழங்குவதை தடையின்றி மின்சாரம் வழங்குவது, பல்வேறு பழுதுகள் ஏற்படும் போது உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பது, பொது நிதியினை பயன்படுத்தி ஆள்துளை கிணறு அமைத்து கூடுதலாக குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பது, அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அறிவுறுத்தல்

பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை முறையாக பராமரித்து செயல்படுத்த வேண்டுமென நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தினார். அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கபாண்டியன், சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், நகராட்சி தலைவர்கள் விருதுநகர் மாதவன், சாத்தூர் குருசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ரவிக்கண்ணன், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், குடிநீர் வடிகால் வாரிய தலைமை என்ஜினீ யர் நடராஜன், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்