குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

நாகை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.

Update: 2023-03-14 18:45 GMT

நாகை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.

நகர மன்ற கூட்டம்

நாகை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

கவிதா கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.):- எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒருமுறை கூட குடிநீர் வருவதில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசு தொல்லை

முகமதுநத்தர் (காங்.) :- நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக குப்பைகள் அல்லப்படாமல், சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லை ஏற்படுகிறது. எனவே தூய்மை பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

சுரேஷ் (சுயேச்சை) :- நகராட்சியால் வழங்கப்படும் குடிநீர் கருப்பாக உள்ளது. ஓடாச்சேரி, கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் இருந்து முறை வைத்து குடிநீர் வழங்க வேண்டும். மேலும் குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும்.

குடிநீர், மின் இணைப்பு திட்டம்

வனிதா (தி.மு.க.):- குடிநீரில், கழிவு நீர் கலந்து வருகிறது. குழாய் உடைந்து குடிநீர் வீணாக ஓடுகிறது. எனவே இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமதுஷேக்தாவூது (தி.மு.க.):- புதிதாக குடிநீர் குழாய் போடப்படுகிறது. அதேபோல் புதைவிட மின் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இரு திட்டங்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.

சாலைகளை சீரமைக்க வேண்டும்

ஜோதிலட்சுமி (இ.கம்யூ.) :-நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற முறையில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.. எனவே சாலைகளை செப்பனிட வேண்டும்.

செந்தில்குமார் (துணைத்தலைவர்):- நகராட்சி தலைவர் தலைமையில் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. பல்வேறு நிதி நெருக்கடிகள் இருந்தாலும், மக்களுக்கு தேவையான பிரச்சினைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்