குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

நாகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-09-29 18:45 GMT

நாகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரசபை கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நகரசபை கூட்டம்

நாகை நகர சபை கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசிய விவரம் வருமாறு:-

பரணிகுமார்:- நாகை நகராட்சியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நகராட்சிக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் மோட்டர் பழுதடைந்து விட்டது. ஒரு மோட்டர் பழுதடைந்து விட்டால் அதற்கு மாற்றாக மற்றொரு மோட்டர் இருக்க வேண்டும். ஆனால் இல்லை. இது குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. குடிநீர் வழங்குவதில் இது போன்ற சிக்கல்களை உடனே தீர்க்க வேண்டும்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

கவிதா கிருஷ்ணமூர்த்தி:- நகராட்சி சார்பில் தனியார் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாகத்தான் குப்பைகளை வாங்குகிறார்களே தவிர சாலையில் கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ளுவது கிடையாது. இதனால் தெருக்களில் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. நாகை நகராட்சியில் உள்ள சேவை மையத்தில் காலதாமதமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

தமயந்தி:- சாக்கடை தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முதல் கட்டமாக கொசு மருந்து அடிக்க வேண்டும்.

சேதமடைந்த மின்கம்பங்கள்

நாத்தர்:- 26-வது வார்டு பகுதிகளில் சாக்கடைகளை அள்ளி அதன் கழிவுகளை சாலை ஓரத்தில் வைத்துள்ளனர். 5 நாட்களாகியும் அந்த இடத்தில் அந்த கழிவுகள் கிடப்பதால் மீண்டும் சாக்கடையில் கலந்து விடுகிறது. சுத்தம் செய்தும் பலன் இல்லாமல் போய்விடுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷோபனா வெற்றிவேந்தன்:- நகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 21-வது வார்டில் சேதமடைந்து மின்கம்பங்களை மழைக்காலத்திற்குள் சீரமைக்க வேண்டும். தாமரைக்குளம் தென்கரை, சேர்வை தோட்டம், வ.உ.சி. தெரு ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். தாமரை குளத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும். தெரு நாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்.

ரேஷன்கடை கட்டிடம்

ஜோதிலட்சுமி குணாநிதி:- 15-வது வார்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும். மழைக்காலங்களில் நெய்தல் நகரில் மழை நீர் தேங்குவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. அங்கு மழைநீர் தேங்காதபடி வடிவால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்