டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

அணைக்கட்டு பகுதியில் டெங்க காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் பாஸ்கரன் அறிவுறுத்தினார்.

Update: 2023-09-19 18:53 GMT

ஒன்றியக்குழு கூட்டம்

அணைக்கட்டு ஒன்றியக் குழு கூட்டம் நேற்று ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சித்ரா குமாரபாண்டியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுதாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் வரவேற்று பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் பேசியதாவது:-

டெங்கு தடுப்பு நடவடிக்கை

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 26 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 30 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தண்ணீர் தேங்கும் இடங்களில் முரம்புகளை கொட்டி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் உடனிருந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையினர் கூடுதலாக பணியாளர்களை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அபராதம்

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர் அல்லது கவுன்சிலருக்கு அபராதம் விதிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரி சாந்தி தெரிவித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி பேசும் போது அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 180 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் 68 பணியாளர்கள், 78 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சதீஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்