பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்துதரக்கோரி நரிக்குறவர்கள் மனு
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள்கூட்டத்தில் பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து தரக்கோரி நரிக்குறவர்கள் மனு அளித்தனர். மேலும் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.
குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, இலவச வீடு, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனு அளித்தனர்.
மொத்தம் 381 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நரிக்குறவர்கள் தர்ணா
ஆற்காடு பஸ் நிலையத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர். இவர்களுக்கு லாடாவரம் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கி நீண்ட காலம் ஆகியும் இதுவரையில் அந்த இடத்தை அளவீடு செய்து அதிகாரிகள் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் அந்த இடம் தனிநபர் ஒருவர் அனுபவத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பட்ட வழங்கிய இடத்தை அளவீடு செய்து வழங்கக்கோரி அழுது புலம்பியவாறு கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதநால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், கலால் உதவி ஆணையர் வரதராஜ் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.