நிலத்தகராறில் ம.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை; தட்டிக்கேட்ட மனைவி அடித்துக்கொலை

பேரணாம்பட்டு அருகே நிலத்தகராறில் ம.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை தட்டிக்கேட்ட அவரது மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-06 17:12 GMT

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே நிலத்தகராறில் ம.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை தட்டிக்கேட்ட அவரது மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிலத்தகராறு

பேரணாம்பட்டு அருகே உள்ள பண்டார வாடை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் டெய்லர் (வயது 85). இவருக்கு குமார் (63), ரவி (61), சதாசிவம் (48), ஆகிய 3 மகன்களும், கோமதி (50) என்கிற ஒரு மகளும் உள்ளனர். சதாசிவம் ம.தி.மு.க. பிரமுகர். கிருஷ்ணனுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் சகோதரர்களிடையே தகராறு இருந்து வந்தது.

குமார், ரவி ஆகிய 2 சகோதரர்களும் தங்களுக்கு நிலத்தை விட்டுத் தருமாறு, தங்கள் தம்பி சதாசிவத்திடம் வற்புறுத்தி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 3-ந் தேதியன்று சதாசிவத்திடம் சென்று மீண்டும் நிலத்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்த ம.தி.மு.க. பிரமுகர் சதாசிவம் 4-ந் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து சதாசிவத்தின் மனைவி சரிதா (42) மற்றும் மகன்கள் கதறி அழுதனர். அவர்களுடைய சத்தத்தை கேட்டு சதாசிவத்தின் அண்ணன்கள் குமார், ரவி, குமாரின் மகன் உமாசங்கர் (27), ேகாமதியின் மகன் தரணிஷ் பாபு (34) ஆகியோரிடம் சரிதா உங்களால் தான் எனது கணவர் சதாசிவம் தற்கொலை செய்து கொண்டார் என கூறி உள்ளார்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த குமார், ரவி, உமாசங்கர், தரணிஷ் பாபு ஆகிய 4 பேரும் சேர்ந்து சரிதாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சரிதாவுக்கு தலை, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அடித்து கொலை

உடனடியாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் சதாசிவத்தின் மகன் மலர் மன்னன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சரிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் குமார், ரவி, உமாசங்கர், தரணிஷ் பாபு ஆகிய 4 பேரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்