கட்டிட அனுமதி பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் கைது
கட்டிட அனுமதி பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர், தனியார் நிறுவன உரிமையாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.;
கடலூர்,
கடலூர் செம்மண்டலம் குண்டுசாலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கோவிந்தசாமி மகன் பரணி (வயது 33). காப்பீட்டு நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியில் தனது தந்தைக்கு சொந்தமான காலி மனையில் வீடு கட்ட முடிவு செய்தார்.
இதற்காக கட்டிட அனுமதி கேட்டு கடலூர் மாநகராட்சியில் இளநிலை உதவியாளராகவும், மேயரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றி வந்த ரகோத்தமனிடம் விசாரித்துள்ளார். அதற்கு அவர், புதுப்பாளையத்தில் இயங்கி வரும் பங்கஜம் பிளானர்ஸ் உரிமையாளர் ஆறுமுகத்தை சந்தித்து, அவர் மூலமாக கட்டிட அனுமதி பெறுமாறு கூறியதாக தெரிகிறது.
அதன்பேரில் பரணி, ஆறுமுகம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்தார். பின்னர் ஆறுமுகம், ரகோத்தமனை சந்திக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவர் ரகோத்தமனை சந்தித்து பேசி உள்ளார். அப்போது, அவர் கட்டிட அனுமதி பெற ரூ.20 ஆயிரத்தை ஆறுமுகத்திடம் கொடுத்தால், அந்த பணம் எங்களுக்கு வந்துவிடும், அதன்பிறகு தான் கட்டிட அனுமதி கிடைக்கும் என்று கூறியதாக தெரிகிறது.
2 பேர் கைது
ஆனால் லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத, பரணி இதுபற்றி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனு அளித்தார். பின்னர் போலீசார் கூறியபடி, ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பங்கஜம் பிளானர்ஸ் நிறுவனத்துக்கு சென்ற பரணி, அங்கிருந்த ஆறுமுகத்திடம் பணத்தை கொடுத்தார். லஞ்ச பணத்தை ஆறுமுகம் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கிருந்த ரகோத்தமனையும் கைது செய்தனர். மேலும் நத்தவெளி ரோட்டில் உள்ள ஆறுமுகத்தின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.