6 மாணவிகளுக்கு மேயர் சரவணன் பரிசு வழங்கினார்
மருத்துவ படிப்புக்கு தேர்வான 6 மாணவிகளுக்கு மேயர் சரவணன் பரிசு வழங்கினார்
நெல்லை:
2022-23-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் லாவண்யா கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கும், கந்தலட்சுமி பேச்சியம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிக்கும், சுப்புலட்சுமி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரிக்கும், சுகந்தி நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கும், மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி முஜிதா பானு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கும், மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி நெல்லை அரசு மருத்துவ கல்லூரியிலும் படிக்க தேர்வாகி உள்ளனர்.
மாநகராட்சி பள்ளிகளில் படித்து தேர்வான இந்த 6 மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், 6 மாணவிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை, ஸ்டெதஸ்கோப் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி பிரபு, கவுன்சிலர் சுப்பிரமணியன், உதவி ஆணையாளர் (கணக்கு) சொர்ணலதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நெல்லையப்பர் கோவில் திருவனந்தல் வழிபாட்டு குழு சார்பில் ஆண்டு தோறும் திருவனந்த வழிபாட்டு இலவச சிறப்பு மலர் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறப்பு மலரை மேயர் பி.எம்.சரவணன் வெளியிட்டார்.