சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு மேயர் பிரியா தொடங்கிவைத்தார்

சென்னை அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-09 21:49 GMT

சென்னை,

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை பள்ளிகளில் பயிலும் மிகச்சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நீட், கிளாட், என்.டி.ஏ., நிப்ட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அகாடமி ஆப் ஸ்டெம் எக்சலன்ஸ் பயிற்சி நடைபெறும் கட்டிடத்தை மேயர் பிரியா நேற்று திறந்துவைத்தார்.

பயிற்சி வகுப்பு

பின்னர், மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். இதேபோல, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மேயர் பிரியா வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். இதில், சென்னை பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 35 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

போக்குவரத்து வசதி, தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேயர் பிரியா பள்ளியின் நூலகம், அலுவலக அறை மற்றும் கழிப்பறைகளை ஆய்வு செய்தார். மேலும், 74 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நா.எழிலன் எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) சரண்யா அறி, நிலைக்குழு தலைவர் சிற்றரசு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்