அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விச்சுற்றுலா மேயர் பிரியா கொடியசைத்து அனுப்பிவைத்தார்
சென்னை,
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அரசு பள்ளி ஆசிாியர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவித்த கல்வித்துறையின் 28 அறிவிப்புகளில் ஒன்றான, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டும் விதமாக கல்வி சுற்றுலா சென்று வர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதன்படி அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 408 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதற்கட்டமாக அவர்களில் 136 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் வைத்து அவர்களிடம் கலந்துரையாடினார். அதன்பின், 4 பஸ்களில் 2 நாள் சுற்று பயணமாக கொடைக்கானல் மற்றும் ஏற்காடு செல்ல கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அதன்பின் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 37 பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்க முதல் முறையாக இந்த சுற்றுலா திட்டம் கொண்டுவரப்பட்டது. இது தவிர மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம். 28 பள்ளிகள் சிட்டிஸ் நிதியிலிருந்து உட்கட்டமைப்பு மாற்றம் போன்ற பல்வேறு பணிகள் முடிவடைந்து பயனுக்கு வந்துள்ளது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 23 பள்ளிகள் மேம்படுத்த டெண்டர் விடபட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் கழிப்பறைகள் சீர்செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர் த.விசுவநாதன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.