தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 1-ந் தேதி, உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மே 1-ந் தேதி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர்கள் அனைவரும் பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாகவும், தொழிலாளர்களை உதிரிகளாக்கி நிரந்தர வேலைகளே இல்லாமல் ஆக்க முயற்சிக்கும் தொழிலாளர் பகைச்சட்டங்களை கண்டித்தும், வளர்ச்சி என்ற பெயரில் பெருங்குழும முதலாளிகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் செய்வதை கண்டித்தும் மே தின விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மே 1-ந் தேதியான நேற்று விராலிமலை சோதனை சாவடியிலிருந்து அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விராலிமலை சோதனை சாவடியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடைவீதி, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று காமராஜர் நகரில் நிறைவு பெற்றது. இதில் விராலிமலை பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தோழர்கள் கட்சி கொடி ஏற்றி மே தினத்தை கொண்டாடினார்கள். மேலும் விளானூர், அமரடக்கி, ஆவணம், பெருங்குடி, கானூர், சுள்ளணி உள்ளிட்ட கிராம பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடி ஏற்றப்பட்டது. ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கொடியை மாவட்ட செயலாளர் செங்கோடன் ஏற்றி வைத்து பேசினார்.