நீலகிரி மாவட்டத்திற்கு மே 19-ந் தேதி உள்ளூர் விடுமுறை
உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு மே 19-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;
நீலகிரி,
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தாவரவியல் பூங்காவிற்கு 7½ லட்சம் பேர் வந்தனர். கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடை சீசன் நடந்தது.
இதையடுத்து 2-வது சீசன் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.
இந்த சூழலில் வருகிற 19-ந் தேதி மலர்கண்காட்சி தொடங்க உள்ளது. இதன்படி மலர் கண்காட்சி வரும் 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. மலர்கண்காட்சிக்காக புல் மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கும் மே 19 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவித்துள்ளார்.