மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழா மாவிளக்கு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழா மாவிளக்கு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
மாரியம்மன் திருவிழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடந்தது. தொடர்ந்து இடும்பன் ஊர்வலமும், சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் விருந்தாடியம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நடக்கிறது.
மாவிளக்கு ஊர்வலம்
முக்கிய நாளான நேற்று காலை 500 இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் தாரை தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் மாரியம்மன் பூத வாகனத்தில் உடன் வர விருந்தாடியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் காளி வேடம் அணிந்து கலந்து கொண்டனர். முக்கிய விதிகள் வழியாக நடந்த இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாலை பொங்கல் வைக்கும் விழாவும், செல்லியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. இந்த ஊர்வலம் விருந்தாடி யம்மன் கோவில் வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
இன்று
இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் விழாவும், மாலை வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சிம்ம வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா மற்றும் மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து ரிஷப வாகனத்தில் மாரியம்மன் பந்தக்காட்சி ஊர்வலமும், தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.