மகாசக்தி மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை

மகாசக்தி மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-03-14 18:26 GMT

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள புன்னம் ஊராட்சி பழமாபுரம் காலனி பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதத்தில் திருவிழா கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. கோவில் திருவிழாவிற்காக காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து தினமும் அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் விநாயகர் வழிபாட்டுடன் திருவிழா தொடங்கியது. பிறகு கரகம் பாலிக்கப்பட்டு கோவிலை வந்தடைந்த பிறகு பெண் பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு பொங்கலை ஒவ்வொரு பானையிலிருந்தும் எடுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்து படைத்து வடிசோறு பூஜை, மாவிளக்கு பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை அக்னிசட்டியுடன் ஆற்றங்கரையில் இருந்து புனிதநீர் தீர்த்தம் ஆண்கள், பெண்கள், குந்தைகள் உள்பட பலர் ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மாலை பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், அவனைத் தொடர்ந்து மாவிளக்குகளை கொண்டு வந்து மாவிளக்கு பூஜையும் செய்தனர். வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மஞ்சள் நீர் விளையாட்டு, இரவு வாண வேடிக்கையுடன் கரகம் ஆற்றில் விடப்பட்டு மறு அபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்