ஆகாயத்தாமரைகள் மண்டிக்கிடக்கும் மாவடிக்குளம்
மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரைகள் மண்டிக்கிடக்கின்றன.
பொன்மலைப்பட்டி:
மிகப்பெரிய குளம்
திருச்சி பொன்மலை பகுதியில் பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான மாவடிக்குளம் உள்ளது. மிகப்பெரிய குளமான இந்த குளம் 147 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளத்திற்கு 7 நீர்வரத்து வாய்க்கால்கள் உள்ளன. இதில் முக்கியமாக கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் வருவது வழக்கம். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மூலம் மீதமுள்ள 6 வரத்து வாய்க்கால்களில் வரும் தண்ணீர் இந்த குளத்திற்கு வந்தடையும்.
முன்பு இந்த குளத்தின் மூலமாக கிடைக்கும் தண்ணீரை கொண்டு ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அருகில் விளை நிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறியதால், வெறும் 100 ஏக்கரில் மட்டுமே இந்தக் குளத்தின் தண்ணீர் மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த குளத்தில் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் நிரம்பினால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்றும், சுற்றுவட்டாரத்தில் 12 கிலோமீட்டர் தூரம் வரை தண்ணீர் பிரச்சினை இருக்காது என்றும், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆகாய தாமரைகள்
ஆனால் தற்போது குளத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பி இருந்தாலும், குளம் முழுவதும் ஆகாய தாமரைகள் படர்ந்து இருக்கின்றன. குளத்தில் தண்ணீரே வெளியே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகள் குளம் முழுவதும் பரவி காணப்படுகின்றன. இந்த ஆகாய தாமரைகளால் குளத்தின் நீர் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் குளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பல மனுக்கள் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குளத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே உடனடியாக இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், ஆகாயத்தாமரைகளையும் அகற்றி நீர் வளத்தினை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை இல்லை
இது குறித்து குளத்தின் அருகில் உள்ள காருண்யா நகரில் வசித்து வரும் மார்கிரேட் சகாய மேரி கூறியதாவது:- இந்த குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளால் நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர் குறைவதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை. எனவே இனிமேலும் தாமதிக்காமல் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
வி.ஐ.பி. நகரில் வசித்து வரும் இயற்கை ஆர்வலர் முத்துராமன்:- ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்தும், அவை அகற்றப்படவில்லை. மேலும் இந்தக் குளத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளம் தூர்வாரப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் உள்ளதோடு, தூர்வாரப்படாமலும் உள்ளது. எனவே இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினால் மட்டுமே அதிக அளவில் தண்ணீர் சேமிக்க முடியும்.