குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை
குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.;
மணவாளக்குறிச்சி,
குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
நிறை புத்தரிசி பூஜை
உலகில் உணவு பஞ்சம் இல்லாமல் இருக்க நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அறுவடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை கோவில்களில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.
பொதுவாக குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கேரள ஆகம அனுஷ்டானங்களுக்கு உட்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள அரண்மனை உத்தரவுபடியே நடக்கிறது. அதன் அடிப்படையில் நேற்று கேரளாவிலும், குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டது.
மண்டைக்காடு கோவில்
இதனையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிறகு 5 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 5.30 மணிக்கு உஷபூஜையும், தொடர்ந்து 6 மணிக்கு நிறை புத்தரிசி பூஜையும் நடந்தது. இந்த பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் நெற்கதிர்களை வாங்கிச் சென்றனர்.
திருவட்டார்
இதேபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதனையொட்டி அதிகாலையில் திருவட்டார் முனிக்கல் மடம் நந்தவனத்தில் பூஜையில் வைக்கப்பட்ட நெற்கதிர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு சந்தனத்துடன் நெற்கதிர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் கோவிலின் அருகில் உள்ள நரசிம்மர் மடத்திலும் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. திற்பரப்பு மகாதேவர் கோவிலில் மேல்சாந்தி கணேசன் நிறை புத்தரிசியை நடத்தினார்.
முருகன் கோவில்
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜையையொட்டி தேர் மூட்டு திருமண மண்டபத்தில் விவசாயிகள் காணிக்கையாக வைத்திருந்த நெற்கதிர்களை பிள்ளையார்கோவில் பூசாரி அங்கிருந்து கட்டாக சுமந்தபடி கிழக்கு நடைவழியாக கோவிலுக்குள் வந்து வேளிமலை முருகன் கோவில் மேல்சாந்தி நாராயணன் போற்றியுடம் ஒப்படைத்தார். பின்னர் நெற்கதிர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நெற்கதிர்கட்டை தலையில் சுமந்தபடி கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்து சன்னதி மற்றும் விநாயகர், சிவன், பார்வதி, சாஸ்தா சன்னதிகளில் நெற்கதிர்கள் கட்டப்பட்டன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு நெற்கதிர்களும், அவலும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், திருவிழாக்குழு நிர்வாகிகள் பிரசாத், சுனில்குமார், மாதவன் பிள்ளை மற்றும் சரோஜினி அம்மா, அனிக்குட்டன், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த நிறை புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.