காஞ்சீபுரத்தில் கொத்தனார் அடித்துக்கொலை; மேஸ்திரி உள்பட 2 பேர் கைது

காஞ்சீபுரத்தில் கொத்தனார் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மேஸ்திரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-19 09:21 GMT

ரூ.10 ஆயிரம் முன்பணம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் என்.ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் கார்த்திக் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த முரளி(28) என்ற கட்டிட மேஸ்திரியிடம், கொத்தனார் வேலைக்கு தொடர்ந்து வருவதாக கூறி சேகர் கடந்த ஜனவரி மாதம் ரூ.10 ஆயிரம் முன்பணமாக பெற்றுள்ளார்.

முன்பணம் பெற்ற சேகர் 3 மாதங்கள் மட்டுமே முரளியிடம் வேலைக்கு சென்றுள்ளார். பிறகு வேறு இடத்திற்கு கொத்தனார் வேலைக்கு சென்று விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முரளி அவ்வப்போது சேகரின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு வந்தார்.

ஆண் பிணம்

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி கீழ்கதிர்பூர் பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தன்னுடைய கணவர் சேகரை காணவில்லை என கூறி அவரது மனைவி அம்பிகா சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சிவகாஞ்சி போலீசார் சேகரின் மனைவியை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அங்குள்ள உடலை காண்பித்ததில் அவர் தன்னுடைய கணவர் சேகர்தான் என்பதை உறுதி செய்தார்.

அடித்துக்கொலை

போலீஸ் விசாரணையில் சேகரை அடித்துக் கொன்றது மேஸ்திரி முரளி மற்றும் அவருடைய நண்பர் அருள்(30) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில் சேகரை அடித்து கொன்றதை இருவரும் ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் சிவகாஞ்சி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

முன்பணம் வாங்கிவிட்டு வேறு இடத்திற்கு வேலைக்கு சென்ற கொத்தனாரை மேஸ்திரியே அடித்துக் கொன்ற சம்பவம் கட்டிட தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்