திருமணமான 9 மாதத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

பறக்கை அருகே திருமணமான 9 மாதத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-22 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

பறக்கை அருகே திருமணமான 9 மாதத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

புத்தளம் அருகே உள்ள உசரவிளையை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 24). கொத்தனாரான இவருக்கும் தெற்குபுளியன்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சிவப்பிரியா (20) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

பிறகு வாழ்க்கையில் இணைய முடிவு செய்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பறக்கை அருகே சி.டி.எம்.புரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இல்லற வாழ்க்கையை சந்தோசமாக தொடங்கினர்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் வழக்கம் போல் சிவபாலன் வேலைக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் வீடு நோக்கி வந்தார். அப்போது மனைவியிடம் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், சிறிது நேரம் தூங்கி விட்டு வருவதாக படுக்கை அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. மேலும் கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிவப்பிரியா கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து சிவபாலன் எந்தவொரு பதிலும் சொல்லவில்லை. இதனால் சிவப்பிரியா கதவின் ஓட்டை வழியாக பார்த்த போது சிவபாலன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

காரணம் என்ன?

இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதபடி அக்கம் பக்கத்தினரை வரவழைத்தார். பின்னர் கதவை உடைத்தபடி சென்று தூக்கில் தொங்கிய சிவபாலனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீஸ் ய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். கொத்தனாரின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

மேலும் குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த 9 மாதத்தில் கொத்தனார் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்