குளத்தில் மூழ்கி கொத்தனார் பலி
மார்த்தாண்டம் அருகே குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்ற கொத்தனார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்ற கொத்தனார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கொத்தனார்
மார்த்தாண்டம் அருகே உள்ள கொல்லஞ்சி பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது82), கொத்தனார். இவருக்கு அமிர்தம் (77) என்ற மனைவியும் 3 மகன்களும், 2 மகள்களும் உண்டு. அவர்களில் ஒரு மகன் ஏற்கனவே இறந்து விட்டார். மரியதாஸ் தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சமீபத்தில் அவருக்கு தலையில் அடிபட்டதால் அடிக்கடி தலை வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தாமரைப்பூவை பயன்படுத்தி மருந்து எண்ணெய் தயாரித்து தலையில் தேய்த்து வந்தால் தலைவலி குணமாகும் என்று யாரோ அவரிடம் கூறியுள்ளனர்.
குளத்தில் மூழ்கி பலி
இதையடுத்து நேற்று முன்தினம் மரியதாஸ் அந்த பகுதியில் உள்ள இளமண்டி குளத்திற்கு சென்று தாமரைப்பூ பறித்து வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் வெகுேநரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி குளத்திற்கு சென்றனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து உறவினர்கள் குளத்தில் இறங்கி தேடினர். நீண்ட நேரம் தேடிய பின்பு இரவு 11 மணியளவில் மரியதாஸ் குளத்தில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தாமரைப்பூ பறிக்க குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை
இதகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குளத்தில் இருந்து பொதுமக்கள் உதவியுடன் மரியதாசின் உடலை மீட்டனர். பின்னர் உடல் பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் விசாரணை நடத்தினார்.