உருட்டுக்கட்டையால் தாக்கியதில் கொத்தனார் பலி
கீரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கியதில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கொத்தனார்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா காரியாப்பட்டி சாலை மறக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவரும், அதே பகுதியை சேர்ந்த தன்னக்குட்டி மகன்களான தனசேகரன் (30), தங்கசாமி உள்ளிட்ட 5 பேர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு பேட்டைவயலில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை முருகன் தனது நண்பர்களான தனசேகரன், தங்கசாமி ஆகியோருடன் கீரமங்கலத்தில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தி உள்ளார். அப்போது முருகன் மற்றும் தனசேகரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
பலி
கீரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தனசேகரன் சாலையோரத்தில் கிடந்த உருட்டுக்கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் முருகனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தனசேகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.