மசினகுடி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
மசினகுடியில் உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்வதை கண்டித்து, அரசு பள்ளி மாணவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மசினகுடி,
மசினகுடியில் உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்வதை கண்டித்து, அரசு பள்ளி மாணவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி அரசு மேல்நிலை பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் இல்லை. இதனால் பல்வேறு விளையாட்டுகளில் மாணவர்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஊட்டி அருகே சோலூர் அரசு பள்ளியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி என்பவரை, கூடுதல் பொறுப்பாக வாரம் 3 நாள் மசினகுடி அரசு பள்ளியில் பணியாற்ற உத்தரவிடப்பட்டது.
அதன்படி அவர் 3 மாதமாக விளையாட்டு போட்டிகளில் பின்தங்கி இருந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்தார். இதன் காரணமாக மாவட்ட அளவிலான போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இந்தநிலையில் வேறு ஒரு ஆசிரியர் மசினகுடி பள்ளிக்கு நியமனம் செய்யப்பட்டார். இதை அறிந்த மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியர் சிவாஜியை தொடர்ந்து பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
தர்ணா போராட்டம்
இதற்கிடையே நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி பள்ளி முன்பு புத்தகப்பையோடு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மசினகுடி போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் உயர் அதிகாரிகளிடம் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களது வகுப்புகளுக்கு சென்றனர்.