மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்: மறியல் செய்ய முயன்ற 950 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மறியல் செய்ய முயன்ற 390 பெண்கள் உள்பட 950 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 18:45 GMT


மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மறியல் செய்ய முயன்ற 390 பெண்கள் உள்பட 950 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல்

மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 7 இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம், ஒரு இடத்தில் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும், மணிப்பூரில் கலவரத்தை தடுத்து அகதிகளாக வாழும் அம்மாநில மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், நல வாரிய நிவாரண தொகைகளை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் காசிநாததுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல், தாலுகா செயலாளர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கல்யாண சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் செய்ய முயன்ற 47 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, முதுகுளத்தூர் தபால்நிலையம் அருகில் மறியல் செய்ய முயன்ற தாலுகா செயலாளர் கலையரசன் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாடானை தபால்நிலையம் அருகில் தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் தலைமையில் ஒரு பெண் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

950 பேர் கைது

கீழக்கரை தபால்அலுவலகம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் 55 பேரும், சிக்கல் தபால் அலுவலகம் அருகில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில்வாகனன் தலைமையில் 29 பேரும், ராமேசுவரம் தபால் அலுவலகம் அருகில் 305 பேரும், சாயல்குடி தபால் அலுவலகம் அருகில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையில் 66 பேரும் என மொத்தம் 652 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராமேசுவரத்தில் நடந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் தலைமையில் தாலுகா செயலாளர் சிவா, மாவட்ட குழு நிர்வாகி ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, தாலுகா குழு நிர்வாகிகள் உள்பட பலர் ஊர்வலமாக வந்து அனைவரும் தபால் நிலையம் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, பரமக்குடி சந்தைபேட்டை முதல் ரெயில்நிலையம் நோக்கி மறியல் செய்ய முயன்ற மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் 298 பேர் கைது செய்யப்பட்டனர். கமுதி தபால்நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் முத்துவிஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொத்தம் மாவட்டத்தில் 7 இடங்களில் தபால் அலுவலகம் மறியல் போராட்டமும், பரமக்குடியில் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 390 பெண்கள் உள்பட 950 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்