மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

கடலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 750 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-07 18:48 GMT

சிதம்பரம், 

சிதம்பரத்தில் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில செயற்குழு கண்ணன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் மூசா, நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு வாஞ்சிநாதன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன், மாவட்ட செயற்குழு ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், வேலையின்மையை போக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி

இதேபோல் விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பண்ருட்டி நகர செயலாளர் உத்தராபதி, வட்ட செயலாளர் ஏழுமலை, நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஜெயபாண்டியன், மாவட்டக்குழு கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவிலில் மத்திய அரசை கண்டித்து நடந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், இளங்கோவன், நிர்வாகிகள் ஜாக்கிர் உசேன், மணிகண்டன், முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடியில் செயற்குழு உறுப்பினர் அசோகன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி-புவனகிரி

புவனகிரியில் மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் ராமசந்திரன் தலைமையிலும், குறிஞ்சிப்பாடியில் மாநில செயற் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையிலும்,

நெய்வேலியில் நகர குழு உறுப்பினர் அமிர்தலிங்கம் தலைமையிலும், மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் திருவரசு முன்னிலையிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 750 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்