தென்காசி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 352 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் 7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 352 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-09-07 18:45 GMT

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

வட்டார செயலாளர் அயூப்கான், மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன், தென்காசி வட்டாரக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, அய்யப்பன், கண்ணன், முருகையா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மணிகண்டன், பீடி தொழிலாளர் சங்க வட்டார தலைவி முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை தபால் அலுவலகம் முன்பு நடந்த சாைல மறியல் போராட்டத்துக்கு தாலுகா செயலாளர் வேலுமயில் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள வங்கி முன்பு, வாசுதேவநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் குமார், வாசுதேவநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஜெயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 50 பேரை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தனுசியா தலைமையில் சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாணவர்களின் கல்விக்கடன், விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு வந்தனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் வட்டார செயலாளர் அசோக் ராஜ், திருவேங்கடம் வட்டார செயலாளர் கருப்பசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுதவிர ஆலங்குளம், பாவூர்சத்திரம், புளியங்குடி ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 352 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்