திருமண மண்டபங்கள் கட்ட வேண்டும்

திருக்கோவிலூரில் அரசு சார்பில் திருமண மண்டபங்கள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.;

Update: 2023-09-02 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பேரூராட்சியாக இருந்தபோது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம் அருகே சேர்மன் சுந்தரம் என்ற திருமண மண்டபமும், ஊராட்சி ஒன்றியம் சார்பில் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் அருகில் காந்திஜி நினைவு திருமண மண்டபமும் கட்டப்பட்டது. அரசுக்கு சொந்தமான இந்த 2 திருமண மண்டபங்களிலும் குறைந்த வாடகையில் ஏழை-எளிய மக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்தி பயன் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூர் பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக சேர்மன் சுந்தரம் திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. இதனால் காந்திஜி நினைவு திருமண மண்டபத்தை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்கும் சுப முகூர்த்த காலங்களில் கடும் போட்டி நிலவியது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது காந்திஜி நினைவு திருமண மண்டபமும் சேதமடைந்து பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. சிலர் மண்டபத்தின் முன் பகுதியை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருவதையும் காண முடிகிறது.

இதனால் திருக்கோவிலூரில் ஏழை-எளிய மக்கள் தங்களது வீட்டு சுப நிகழ்சிகளை திருமண மண்டபங்களில் நடந்த முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஓரளவு வசதி உள்ளவர்கள் மட்டும் வேறு வழியின்றி அதிக வாடகை செலுத்தி தனியார் திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஆனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடன் வாங்கி திருமணமண்டபத்தை வாடகைக்கு பிடித்து சுப நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அவல நிலை இருந்து வருகிறது.

எனவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோவிலூரில் ஏற்கனவே இருந்தது போல் அரசு சார்பில் புதிதாக திருமண மண்டபங்களை கட்டி குறைந்த வாடகைக்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, முன்பு அரசு திருமண மண்டபங்கள் இருந்ததால் குறைந்த வாடகையிலேயே திருமணம் மற்றும் காதணி விழா, மஞ்சள் நீரட்டு விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். ஆனால் தற்போது அரசு திருமண மண்டபங்கள் இ்ல்லாததால் அதிக வாடகை கொடுத்து தனியார் திருமண மண்டபங்களில்தான் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டி உள்ளது. இதற்காகவே தனியாக பணம் கடன் வாங்க வேண்டி உள்ளது. அப்படி இருந்தும் சில நேரங்களில் மண்டபம் வாடகைக்கும் கிடைப்பதில்லை. எனவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் நகராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 திருமண மண்டபங்களை கட்டி குறைந்த வாடகைக்கு விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்