அதிகாரி எனக்கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த புரோட்டா மாஸ்டர்
சமூகவலைத்தளம் மூலம் பழகி மதுரை பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்த புரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
சமூகவலைத்தளம் மூலம் பழகி மதுரை பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்த புரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
மாணவி மாயம்
மதுரை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புவதுமாக இருந்துள்ளார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாணவியை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனையின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
குளித்தலையில் சிக்கினர்
மாணவி பயன்படுத்திய செல்போன் எண் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் மூலம் வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அவர் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மேலவாத்தியம் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (வயது 31) என்பதும், அவர்தான் மதுரை வந்து மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் குளித்தலை சென்று அங்கிருந்த அவர்கள் 2 பேரையும் மதுரைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதிகாரி வேலை
விசாரணையின்போது போலீசாரிடம் மாணவி கூறியதாவது:-
எனக்கு அப்பா இல்லை. அம்மா தான் வேலைக்கு சென்று படிக்க வைத்தார். அவரது செல்போனில் அடிக்கடி ஷேர்சாட், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களை பயன்படுத்தினேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஷேர்சாட் மூலம் சரண்ராஜ் அறிமுகமானார். அவர் பிரபல கம்பெனியில் அதிக சம்பளத்துடன் அதிகாரியாக வேலை பார்ப்பதாக கூறினார். அதன்பின் 2 பேரும் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்தநிலையில் காதல் ஏற்பட்டது.
வீட்டை விட்டு என்னுடன் வந்து விடு, திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நான் அவருடன் சென்றேன். ஆனால் அங்கு சென்று பார்த்த போதுதான், அவர் குளித்தலையில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தது தெரியவந்தது. என்னை அவர் திருமணம் செய்து கொண்டு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
7 பேருடன் பழகியவர்
மேலும் போலீசார் சரண்ராஜிடம் விசாரித்த போது, அவர் மாணவி மற்றும் திருமணமான பெண் உள்பட 7 பேருடன் சமூக வலைத்தளம் மூலம் பேசிப்பழகி வந்துள்ளார். அதில் மாணவியை திருமணம் செய்துள்ளார்.
17 வயது மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த புரோட்டா மாஸ்டர் சரண்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மாணவியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு மாணவியை மீட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.