கோவிலில் பிரசாதம் தயாரிக்க சென்ற சமையல் தொழிலாளி மர்மசாவு
ரெட்டியார்சத்திரம் அருகே தமிழ் புத்தாண்டையொட்டி கோவிலில் பிரசாதம் தயாரிக்க சென்ற சமையல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிணத்துடன் உறவினர்கள் மறியல் செய்தனர்
சமையல் தொழிலாளி
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கோபிநாத சுவாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் பிரசாதம் தயாரிக்கும் பணி நடந்தது. இந்த பணிக்காக கோவில் அருகே உள்ள முத்துராம்பட்டியை சேர்ந்த சமையல் தொழிலாளர்கள் வேல்முருகன் (வயது 39), தம்பித்துரை, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வேல்முருகன் வீட்டுக்கு தம்பித்துரை வந்தார். அங்கு அவருடைய தாயார் காளியம்மாளிடம் மலைப்பகுதியில் வேல்முருகன் மயங்கி கிடப்பதாக கூறினார். உடனே பதறியடித்து கொண்டு காளியம்மாள் மலைப்பகுதிக்கு சென்றார். அங்கு வேல்முருகன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.
உறவினர்கள் மறியல்
உடனே வேல்முருகனின் உடலை தம்பித்துரை தோளில் தூக்கி சுமந்தபடி மலைப்பகுதியில் இருந்து கீழே வந்தார். அவருடன் சேர்ந்து காளியம்மாள் மலையில் இருந்து கீழே இறங்கினார். தகவலறிந்த வேல்முருகனின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்ப முயன்றனர். அப்போது அவருடைய உறவினர்கள், வேல்முருகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தம்பித்துரை, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வேல்முருகனுக்கு சண்முகப்பிரியா என்ற மனைவியும், சிரஞ்சீவி என்ற மகனும், அஞ்சலி என்ற மகளும் உள்ளனர்.