அரசு டாக்டருடன் வசித்து வந்த உளவியல் பெண் நிபுணர் மர்மச்சாவு
பெரம்பலூர் அருகே அரசு டாக்டருடன் வசித்து வந்த உளவியல் பெண் நிபுணர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளவியல் நிபுணர்
அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் சிவசக்தி (வயது 38). உளவியல் நிபுணரான இவர், தனது தந்தையின் அக்காள் மகனான கீழப்பழுவூரை சேர்ந்த பூமிபால சுந்தரத்தை காதலித்து கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 18 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவசக்தி, பூமிபால சுந்தரத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவகாரத்து பெறாமல் அவரை விட்டு பிரிந்து சென்றார். மகளை பூமிபால சுந்தரம் வளர்த்து வருகிறார்.
சாவு
பின்னர் சிவசக்தி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவரும், ஏற்கனவே திருமணமானவருமான மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரியும் நேரு (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சிறுவாச்சூரில் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு சிவசக்தி வழக்கம் போல் தனது அறைக்கு தூங்க சென்றார். ஆனால் நேற்று காலையில் நேரு எழுந்து பார்க்கும் போது சிவசக்தி நாற்காலியில் எவ்வித அசைவும் இன்றி அமர்ந்திருந்தாராம். இதையடுத்து சிவசக்தியை மீட்டு சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிவசக்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் நேரு சிவசக்தியின் உடலை தனது வீட்டிற்கு எடுத்து வந்து, பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் தொடர்பாக சிவசக்தியின் தாய் அன்புமணி கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சிவசக்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போன சிவசக்திக்கு சிறு வயதில் இருந்து இதயத்தில் பிரச்சினை இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக இதய பிரச்சினைக்கு அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
டாக்டர் நேருவின் மனைவி, 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.