உடுமலை வாரச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

உடுமலை வாரச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-09-22 17:30 GMT


உடுமலை வாரச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

உடுமலை உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். அப்போது பல்வேறு பிரச்சினைகளை குறித்து விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இதில் உடுமலை, மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பேசுகையில், குடிமங்கலம் பகுதியில், மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், மின்தடையை சரி செய்து இணைப்பு வழங்க பல மணி நேரம் ஆகிறது. இதனால் அப்பகுதியினர் பாதிப்படைகின்றனர்.

வறட்சி தாலுகா

வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேளாண் உரங்களை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவை, வறட்சி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் ஆர்.என்.ஆர். திட்டத்தில் புதிய மரங்கள் நடுவதற்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தையின் இடநெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். உடுமலை மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளான பொன்னாலம்மன் சோலை, திருமூர்த்தி மலை, ஜல்லிபட்டி கொங்குரார்குட்டை பகுதியில் வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கம்பிவேலியை சரிசெய்ய வேண்டும். வனவிலங்குகளால், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

உயிர் தண்ணீர் வழங்க வேண்டும்

உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரையில் நடப்பாண்டு 42 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு, ரூ.17 கோடி கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டிற்கு 532 கரும்பு விவசாயிகள் சுமார் 1500 ஏக்கர் நிலங்களில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முழுவதுமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமராவதி அணையிலிருந்து உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொள்முதல் செய்த கொப்பரை விவசாயிகள் 14 பேருக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும் என்றனர்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார்கள் சுந்தரம் (உடுமலை), செல்வி (மடத்துக்குளம்), விவேகானந்தன் (சமூக பாதுகாப்பு திட்டம்), விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்