தாராபுரம்-கரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

Update: 2023-01-04 17:38 GMT


தாராபுரம் அருகே கல்லூரி மாணவர் சாவுக்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவர் சாவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தனுஷ் (வயது 19). கல்லூரியில் படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் ஜீவானந்தம் (19), பள்ளி மாணவன் கவினேஷ் (14). இவர்கள் 3 பேரும் கடந்த 31-ந் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட ஏற்பாடு செய்து வந்தனர். அப்போது 3 பேரும் சேர்ந்து தாராபுரம்-கரூர் சாலையில் எம்.ஜி.ஆர்.நகர் அருகே சாலையில் புத்தாண்டு தின வாழ்த்துக்கள் என்ற வாசகம் எழுதி கொண்டிருந்தனர். அப்போது தாராபுரத்தில் இருந்து மூலனூர் நோக்கி வந்த கார் இவர்கள் 3 பேரும் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தனுஷ், ஜீவானந்தம், கவினேஷ் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் .மேல் சிகிக்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கல்லூரி மாணவர் தனுஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் மீது மோதிய காரை கண்டு பிடிக்க வேண்டும். கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும். மின்விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்போது போலீசார் 2 நாட்களில் குற்றவாளியை பிடித்து விடுவதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்