காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2022-11-26 16:47 GMT


மடத்துக்குளம் அருகே 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

மடத்துக்குளத்தையடுத்த நரசிங்காபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை காலி குடங்களுடன் பொதுமக்கள் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பல்வேறு அவசரங்களில் இருந்ததால் தவிப்புடன் பஸ்சில் காத்திருந்தனர். ஒரு சில பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிரந்தர தீர்வு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

நரசிங்காபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினர்.

இதனையடுத்து குடிநீர்ப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தினசரி நூற்றுக்கணக்கான நீண்ட தூரம் பயணம் செய்யும் வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் வேண்டுகோளாக உள்ளது.

மேலும் செய்திகள்