மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2023-04-10 18:34 GMT

மாரியம்மன் கோவில்

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் மாரியம்மன் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும் தை மாதம் போகி அன்று அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அம்மன் கேட்ட வரத்தை பக்தர்களுக்கு அளிப்பதாகவும், குழந்தை வரம் கேட்டு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதாகவும் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் நம்புகின்றனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

யாகசாலை பூஜை

இதற்காக ஊர் கவுண்டர் கே.ஜி.பூபதி, ஆர்.ஆறுமுகம், கே.ஏ.சக்கரவர்த்தி, கே.டி.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கே.குமரன், டி.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் எஸ்.கார்த்திக், ஏ.மணி, ஏ.சந்திரமுர்த்தி, கே.எஸ்.ஏ.மோகன்ராஜ், எல்.தாமரைச்செல்வன், பி.செல்லபாண்டியன், எம்.பிரபு, கே.பிரபாகரன், கே.எஸ்.கமல், கே.எம்.நடராஜன், வெங்கடேசன், எஸ்.பட்டு, ஒன்றிய கவுன்சிலர் லட்சுமிபூபதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணி நடைபெற்றது.

கோவில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை தொடங்கியது. அன்று விநாயகர் பூஜை, அங்குரார்ப்பணம், புண்ணியாவாசனம், மிருத்சங்கரணம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜைகள், வேதிகா அர்ச்சனை, துவார பூஜைகள், லலிதா சகஸ்ரநாமம், பாராயணம், கணபதி பூஜை, பூர்ணாஹூதி, வேத, கீத, நாத, உபசாரங்கள், ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பிரசாதங்கள் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.

கும்பாபிஷேகம்

தொடர்ந்து நேற்று திருப்பள்ளி எழுச்சி, தாய் வீட்டு சீதனமாக ஆர்.ஆறுமுகம், உமாசெல்வி ஆறுமுகம் குடும்பத்தினர் பழங்கள், இனிப்புகள், கார வகைகள், சாமிக்கு தங்க தாலி கொண்ட சீர்வரிசை தட்டுக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் இரண்டாம் கால யாக பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து தம்பதியர் சங்கல்பம் நடைபெற்றது. பிரதான ஹோமம், விசேஷ திரவிய ஹோமம், கலசத்திற்கு பூஜை செய்யப்பட்டது.

சாமிக்கு ருத்ரம், தாமகம், பாராயம், நாடி சந்தானம், பூஜைகள் செய்யப்பட்டு முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பம்பை, மேளதாளத்துடன் புனிதநீர் கலசங்களுடன் கோவிலை சுற்றி எடுத்துவந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மகா சக்தி, ஓம் சக்தி பராசக்தி என பக்த் கோஷங்களை எழுப்பினர். சில பெண்கள் அருள் வந்து ஆடினார்கள்.

அன்னதானம்

மூலவர் மாரியம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூலஸ்தானத்தில் படைக்கப்பட்ட பிரசாதங்கள், இனிப்பு, கார வகைகள், பழங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கசிநாயக்கன்பட்டி ஊர் கவுண்டர் மற்றும் ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்