நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள துளசியாப்பட்டினம் பெருமாள்கோவிலில் இருந்து துளசியாப்பட்டினம் பாலம் வரை சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டபொறியாளர் மதன்குமார், சாலை ஆய்வாளர் கவிதா உள்ளிட்டோர் நேற்று அங்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடைக்காரர் திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சமாதானம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி தனபால் ஆகியோர் அங்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் இதில் ஒரு வார காலத்துக்குள் தங்களுடைய கடைகளை தாமாகவே அகற்றிக்கொள்வது என்றும், இல்லை என்றால் ஒரு வார காலத்துக்கு பிறகு நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.