சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி
உடுமலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
உடுமலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மினி மாரத்தான் போட்டி
உடுமலை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், லெப்டினன்ட் சுபாஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி, உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ், பிரியா நர்சிங் கல்லூரி இணைந்து 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போதைப்பொருள், நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டியை நடத்தியது.
போட்டி ஜூனியர் (16 வயதுக்கு உட்பட்டோர் 4 கிலோ மீட்டர்), சீனியர் (19 வயதுக்கு உட்பட்டோர் 6 கிலோ மீட்டர்), சூப்பர்சீனியர் (50 வயதுக்கு உட்பட்டோர் 10 கிலோ மீட்டர்) மற்றும் மூத்த குடிமக்கள் (50 வயதுக்கு மேற்பட்டோர் 4 கிலோ மீட்டர்) என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக அறக்கட்டளை வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஜி.வி.ஜி. கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் கற்பகவல்லி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு உடுமலை -பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். அதைத் தொடர்ந்து ராகல்பாவி பிரிவில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்கியது.
உடுமலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியை முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தொடங்கிவைத்தார். இதில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று இடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஓவியம், சிலம்பம், சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கேப்டன் வெள்ளியங்கிரி, நாயப் சுபேதார் நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவக்குமார், விளையாட்டு இயக்குனர் வெள்ளைச்சாமி (பணி நிறைவு) சுபாஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் செல்வராஜ் இணைந்து செய்திருந்தனர். நிகழ்ச்சியை சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு தொகுத்து வழங்கினார்.
மாரத்தான் போட்டியை முன்னிட்டு உடுமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.