மாப்பிள்ளையூரணி காட்டுப்பகுதியில்4 மாடுகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காட்டுப்பகுதியில் 4 மாடுகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பகுதியில் மக்கள் அதிக அளவில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். அதே போன்று கோமஸ்புரத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரும் மாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டில் இருந்து மேய்ச்சலுக்கு சென்ற அவரது பசு மாடு வீடு திரும்பாததால் அவர் மாப்பிள்ளையூரணி காட்டுப்பகுதியில் தேடிப்பார்த்தாராம். அப்போது காட்டுப்பகுதியில் நந்தகுமாரின் பசுமாடு உள்பட 4 மாடுகள் இறந்து கிடந்தன.
இது குறித்து நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மாடுகள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.