மாற்று வரைபடம் தயாரித்து அரசுக்கு அனுப்ப விவசாயிகள் முடிவு

Update: 2022-06-19 16:17 GMT


பல்லடம் அருகே சூலூர் விமான படை ஆயுத கிடங்கு அமைக்க மாற்று இடத்தை வரைபடம் தயாரித்து அரசுக்கு அனுப்ப விவசாயிகள், பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

விமானப்படை

திருப்பூர், கோவை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு ஆயுத கிடங்கு மற்றும் ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86 ஏக்கர் 38 சென்ட் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதற்கான நில அளவீடு, வீட்டுமனைகள், விளை நிலங்கள், மரங்கள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வருவாய்த்துறை, மற்றும் விமானப்படை துறைக்கு தங்களது ஆட்சேபத்தை புகாராக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆயுதகிடங்கு அமைக்க மாற்று இடத்தை வரைபடம் தயாரித்து அரசுக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

மாற்று இடம்

இந்த பகுதியில் பல தலைமுறைகளாக வசிக்கின்றோம் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றோம் இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது எங்களது வாழ்வாதாரமே கேள்விகுறியாகும். சூலூர் விமான படை தளத்திற்கு அருகாமையில் 400 ஏக்கர் தரிசு நிலங்கள் இருக்கும் போது விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

விவசாயத்தை அழிக்காமல் மாற்று இடமாக தரிசு நிலம் இருப்பதை மத்திய, மாநில, அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரைபடம் ஒன்றை தயாரித்துள்ளோம் இதனை சரிபார்த்து விவசாய விளை நிலங்களை விட்டு விட்டு, தரிசாக கிடக்கும் நிலங்களை கையகப்படுத்தி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்